×

தெய்வத்தின் அவதாரம் நமக்காகத்தான்

ஸ்ரீராமாவதாரத்தை இப்படிச் சொல்கிறது பாசுரப்படி ராமாயணம்.

`மண்ணுலகத்தோருய்ய அயோத்தி
என்னும் அணி நகரத்து
வெங்கதிரோன் குலத்துக்கோர்
விளக்காய்க்
கௌசலைதன் குல மதலையாய்த்
தயரதன் தன் மகனாய்த் தோன்றிக்
குணம் திகழ் கொண்டலாய்
மந்திரங்கொள் மறைமுனிவன் வேள்வி
காக்கநடந்து’

எம்பெருமானை பெற்றவர்கள் யார் என அவர்களைச் அறிமுகப்படுத்தும் பொழுது,

1. கோசலை தன் குலமதலை
2. தயரதன் மகனாய்
3. மந்திரங்கொள் மறைமுனிவன்

– என்ற வரிசையைச் சொல்லுகிறார்.

முதலில் மாதா கோசலை. பின் பிதாவாகிய தசரதன். மூன்றாவது குருவாகிய விசுவாமித்திரர். தெய்வமாகிய ராமனே இந்த வரிசையைத் தான் பின்பற்றுகின்றார். உபநிடதம் இப்படித்தானே சொல்கிறது.

`மாத்ரு தேவோ பவ:
பிதுர் தேவா பவ:
ஆசாரிய தேவ பவ:’

அடுத்து ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி கோசலையிடம் கர்ப்பவாசம் செய்தவன். ஆனால் தயரதன் யாகம் செய்து பாயசத்தை பிரசாதமாகப் பெற்று ராமனை மகனாகப் பெற்றவன். அவனுக்கு உதிர சம்பந்தம் இல்லை. எனவே கோசலைக்கு நேர் சம்பந்தம் வந்து விடுகிறது. ஏனென்றால் பரமாத்மாவை கர்ப்பவாசத்தில் வைத்து, மடி சுமந்து, பெறக்கூடிய திறன் கோசலைக்கு உண்டு. அதனால், ராமனுடைய அவதாரத்தை கம்பன் எழுதுகின்ற பொழுது திறங்கொள் கோசலை என்கிற பதத்தை பயன்படுத்துகின்றார்.

`ஒரு பகல் உலகு எலாம் உதரத்துள்
பொதிந்து
அருமறைக்கு உணர்வு அரும் அவனை,
அஞ்சனக்
கருமுகில் கொழுந்து எழில் காட்டும்
சோதியை
திரு உறப் பயந்தனள் திறம் கொள்
கோசலை
பிரளயத்தின்போது எல்லா உலகங்களை
யும் தன் வயிற்றில் அடக் கியவன்.
அரிதான வேதங்களாலும் முழுமையாக
உணர்ந்து கொள்ள முடியாத அதிசயன்,
கண் மை போல, மழை மேகத்தைப்
போலக் கருவண்ண எழில் காட்டும்
ஒளிவடிவானவன்.’

அத்தகைய நாராயணனின் அவதாரமான ராமனை, அனைவரும் நலன் பெறுவதற்காக கருவில் சுமந்து பெற்றாள் திறன் வாய்ந்த கோசலை. குலசேகர ஆழ்வார் கோசலையின் நிலை நின்று தாலாட்டு இசைக்கிறார். இன்றைக்கும் பெருமாள் கோயில்களில் நிறைவு பள்ளியறை வழிபாட்டில் இந்தப் பாசுரம் பாடுவது உண்டு.

`மன்னுபுகழ் கோசலை தன் மணிவயிறு
வாய்த்தவனே!
தென்னிலங்கை கோன் முடிகள் சிந்து
வித்தாய்! செம்பொன் சேர்
கன்னி நன் மா மதில் புடை சூழ் கணபுரத்
தென் கருமணியே!
என்னுடைய இன்னமுதே! இராகவனே!
தாலேலோ!’

குழந்தையை பெற்ற தாய்மார்கள் குழந்தைகளை தாலாட்டும் போது இந்த பாசுரம் சொல்லி தாலாட்டுங்கள். தமிழும் வளரும். குழந்தைக்கு ஒழுக்கமும் வளரும். இதில் மன்னு புகழ் கோசலை என்கின்ற வார்த்தை அபாரமானது. புகழ் மன்னு கோசலை என்று இதை எடுத்துக் கொள்ள வேண்டும். ராமனைப் பெற்றதால் இன்றளவுக்கும் கோசலையின் நினைவு ஒவ்வொரு அடியார்க்கும் வருகின்றது. ஊருக்கும் உலகுக்கும் உபகாரமான ஒரு பிள்ளையைப் பெறுகின்ற பொழுது, தாய்மை பூரணத்துவம் பெறுகின்றது. புண்ணியத்தை அடைகின்றது. அதைத்தான்

வள்ளுவர் பெருந்தகையும்,
ஈன்ற பொழுதின் பெரிது உவக்கும்
தன்மகனை
சான்றோன் எனக்கேட்ட தாய்

– என்று அழுத்தமாக தாயின் பெருமையைச் சொல்லி இருக்கின்றார்.

அப்படிப்பட்ட பெருமையை ஒவ்வொரு தாய்மார்களும் பெற வேண்டும் என்று சொன்னால், இந்தப் பாடலை மனதில் கொண்டு இறைவனை வணங்கி தவம் செய்ய வேண்டும். கர்ம வினையால் பிள்ளைகள் பெறுவது உண்டு. ஆனால், சில பிள்ளைகள் ஒரு குலத்தின் கர்ம வினையையே தீர்த்துவிடும். அதைத்தான் “கோசலை தன் குலமதலை” என்கின்ற சொற்றொடராலே ராமனின் அவதார ரகசியத்தை ஆழ்வார்கள் கூறுகின்றார்கள். உலகெல்லாம் வயிற்றில் சுமப்பவனை, தன் வயிற்றில் சுமந்த பெருமை கோசலைக்கு மட்டும்தான் உண்டு எனவே விசுவாமித்திர ரிஷியும் சுப்ரபாதம் பாடும் பொழுது தசரதனைச் சேர்க்காமல் கோசலையை முன்னிட்டு ராமனுக்கு சுப்ரபாதம் பாடுகின்றார்.

கௌசல்யா சுப்ரஜா ராம
பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே…
உத்திஷ்ட நர ஸார்தூல
கர்த்தவ்யம் தைவமாஹ்நிகம்…

காலையில் எழுந்தவுடன் இந்த இரண்டு வரி சுப்ரபாத ஸ்லோகத்தை சொல்லுங்கள். வேதம் முழுமையும் சொன்ன பலன் கிடைக்கும். அடுத்த வரி “தசரதன் தன் மகன்” என்று வருகிறதல்லவா! தந்தையின் விட்டுச் சென்ற கடமையை தொடர்ந்து செய்து அவருடைய பெருமையை காப்பவனே மகன் என்று சொல்லப்படுகின்றான். தசரதனுடைய வாக்குறுதியை தன்னுடைய நலன் கருதாது, காத்துக் கொடுத்த பிள்ளை ராமன் என்பதால் அவனை ‘‘தசரதன் தன் மகனாய்’’ என்று குறிப்பிடுகின்றார்.

ராமன் தசரதனின் வாக்கைக் காத்ததால் தசரதனுக்கு ‘‘வாய்மைக்கு ஒரு தசரதன்’’ எனும் பெருமை கிடைத்தது. அது மட்டும் இல்லை. தசரதனுடைய ஆட்சியை விட ராமராஜ்ஜியம் சிறப்பாக இருக்கும் படி அமைந்தது. தசரதன் வெகு காலம் பிள்ளை இல்லாமல் இருந்து வருந்தினான். தனக்கு ஒரு பிள்ளை வேண்டும் என்று தன்னுடைய குலகுருவான வசிஷ்டரிடம் கேட்க, அவர், “என்ன காரணத்தினால் உனக்கு ஒரு பிள்ளை வேண்டும்?” என்று கேட்க, அப்பொழுது தசரதன் சொல்லுகின்றான்.

“எனக்கு நீர் கடன் செய்வதற்காக ஒரு பிள்ளை வேண்டும் என்று கேட்கவில்லை. எனக்குப் பின்னால் இந்த ஆட்சியை செவ்வனே நடத்தி, மக்களின் குறைகளைத் தீர்ப்பதற்கு ஒரு பிள்ளை வேண்டுமே, எனக்குப் பின்னால் இந்த உலகம் மறுகுமே என்பதற்காகவே நான் வாரிசு வரம் கேட்கிறேன்” என்கின்றான்.

`அறுபதினாயிரம் ஆண்டும் மாண்டு உற,
உறு பகை ஒடுக்கி, இவ் உலகை
ஓம்பினேன்;
பிறிது ஒரு குறை இலை; என் பின்
வையகம்
மறுகுவது என்பது ஓர் மறுக்கம்
உண்டுஅரோ’

அதனால்தான் தேவர்கள் குறைகளை தீர்க்கவும், மண்ணுலகத்தோர் உய்யவும், ‘‘ஒரு சொல், ஒரு இல், ஒரு வில்’’ என்று தானே வாழ்ந்து காட்டவும், தசரதன் தன் மகனாய் தோன்றினான். அடுத்த வரி “மந்திரங்கொள் மறை முனிவன் வேள்வி காக்க நடந்து” என்று வருகிறது இங்கே விசுவாமித்திரன் என்று நேரடியாக பெயரைச் சொல்லவில்லை. தேவர்களுக்கு உபகரமான யாகங்களைச் செய்கின்றவர்கள் ரிஷிகள். அவர்கள் யாகங்கள் செய்தால்தான் இயற்கையை நடத்துகின்ற தேவர்கள் தங்கள் சக்தியைப் பெறுவார்கள். அவர்கள் சக்தியைப் பெற்றால்தான் மழையாகவும் ஒளியாகவும் இந்த உலகத்துக்கு தேவையான உதவிகளை அவர்களால் செய்ய முடியும். மண்ணுலகத்தோர் வாழ்வும் தேவர்கள் வாழ்வும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. அதற்கு துணை நிற்பது வேள்விகள். அந்த வேள்விகளை நடத்துபவர்கள் ரிஷிகள்.

எனவே, மண்ணுலகத்தோர் உய்ய வேண்டும் என்று சொன்னால் தேவர்கள் உய்ய வேண்டும். தேவர்கள் உய்ய வேண்டும் என்று சொன்னால் அவர்களுக்குத் தேவையான யாகங்கள் நடக்க வேண்டும். அந்த வேள்விகளுக்கான இடையூறுகளை களைய வேண்டும். அந்த பொறுப்பு எம்பெருமானுக்கு இருப்பதால், அவர் ராமனாக வடிவெடுத்து வந்து, விசுவாமித்திரரின் வேள்வியை காத்தார். எனவே தெய்வத்தினுடைய அவதாரம் என்பது நமக்காகத்தான் என்பதை மறந்து விடக்கூடாது.

தொகுப்பு: தேஜஸ்வி

The post தெய்வத்தின் அவதாரம் நமக்காகத்தான் appeared first on Dinakaran.

Tags : God ,Ramayana ,Bhasura ,Sri Ramavatara ,``Mannulakathoruyya Ayodhya ,Venkathiron Kulathukkor ,Channayak Kausalaitan Kula ,
× RELATED வாசிப்பும் வழிபாடுதான்…